Home ஒரு “விண்கல்“

ஒரு “விண்கல்“

08 Feb

ஒரு “விண்கல்“

மதுரை அருள்மிகு சோமசுந்தரேசுவரருக்கு (சுயம்புலிங்கத்திற்கு) மேல் உள்ள விமானம் ஒரு விண்பொருளாகும். இது ஒரு “விண்கல்“. விண்கல்லால் ஆன விமானங்கள் இரண்டு கோயில்களில் உள்ளதாகப் புராணங்களில் குறிப்புகள் உள்ளன. ஒன்று மதுரை மற்றொன்று திருவீழிமிழலை. இந்த இரண்டு விமானக் கற்களும் விண்ணில் இருந்து வந்து சேர்ந்த காரணத்தினால், இவற்றை “விண்ணிழி விமானம்“ எனத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

தேவர்களின் தலைவன் இந்திரன். இவன் கொலைப்பாவத்தை போக்கிக் கொள்ள வேண்டிப் பல திருத்தலங்களுக்கும் சென்று வழிபாட்டான். அப்போது, சிவபெருமானின் திருவிளையாடலால் கடம்பவனமாகிய மதுரையில் ஓர் அழகிய சுயம்புலிங்கத்தை கண்டு பூசித்து வழிபட்டான். வழிபட்ட உடனேயே அவனது பாவம் நீங்கியது. இந்திரனும், அச் சுயம்பு லிங்கத்திற்கு ஒரு பெரிய கோயிலை கட்டினான். தேவலோகத்திலிருந்து ஒரு விமானத்தை (ஒரு பெரிய கல்) எடுத்துவந்து சுயம்புலிங்கத்திற்கு மேலே விமானமாக அமைத்தான். எனவே இந்த விமானத்திற்கு இந்திர விமானம் என்ற காரணப் பெயர் உண்டானது. இந்த விமானம் விண்ணில் இருந்து இழிந்து (இறங்கி) வந்த காரணத்தினால் “விண்ணிழி விமானம்“ என்ற காரணப் பெயரும் உண்டானது.

இந்த விண்ணிழி விமானத்தை எட்டு யானைகளும், முப்பத்திரண்டு சிங்கங்களும், அறுபத்துநான்கு பூதகணங்களும் தாங்கி நிற்கின்றன.

முன்னொரு காலத்தில் பிரளயம் ஏற்பட்டுத் தமிழகம் முழுவதும் அழிந்துவிட்டது. அவ்வளவு பெரிய பிரளயத்திலும் இந்த விண்ணிழி விமானம் மட்டும் அழியவில்லை(1). மதுரையானது, பிரளயகாலத்தில் வந்த கடல்நீர் வற்றிய பின்னர் கடம்ப மரங்கள் அதிகமாக முளைத்துக் கடம்பவனக் காடாக இருந்தது. இந்தக் கடம்ப வனத்தை அழித்து வங்கிய சேகர பாண்டியன் தற்போதுள்ள மதுரை மாநகரை நிர்மாணம் செய்தான்.

அப்போது மதுரையின் பண்டைய எல்லைகளைக் காட்டுமாறு சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டான். மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்கச் சிவபெருமானும் ஒரு சித்தர் வடிவில் இந்த விண்ணிழி விமானத்திலிருந்து தோன்றி அருளினார்.

சிவபெருமாள் தோன்றி அருளிய இந்த விண்ணிழி விமானத்தை வணங்கினால் சிவபெருமானையே நேரில் வணங்குவதற்குச் சமமாகும். எனவே மதுரை அருள்மிகு மீனாட்சி சொக்கநாதரின் விமானத்தை வணங்கி வேண்டிய வரங்களைப் பெற்று நல்வாழ்வு வாழ்வோம்.

இதேபோல், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவீழிமிழலையின் விமானமும் விண்ணிழி விமானம் ஆகும். திருமால் விண்ணுலகிலிருந்து விமானத்தைக் கொண்டு வந்து, அதில் சிவபெருமானை எழுந்தருளச் செய்து, பூசனை செய்து, அருச்சித்து சக்கராயுதம் பெற்றதாகப் புராணம் கூறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *